‘குற்றவாளியே… ராஜினாமா செய்’ – வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்தால் பற்றியெரியும் பெய்ரூட்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்திற்கு அந்நாட்டு அரசு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி அந்நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆக., 4 மாலை பெய்ரூட் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறிய விபத்தில் அந்நகரில் 150க்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 5000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.

வெடி விபத்தின் காரணமாக அந்நகரமே உருக்குலைந்து காணப்படுகிறது.

நகரில் உள்ள 75 சதவீத கட்டடங்கள் குலுங்கி சேதமடைந்தன.

நகரின் பெரும்பாலான பகுதி கான்கிரீட் குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. 

பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முடியாமல் அரசு திண்டாடி வருகிறது.

வீடுகளை இழந்துள்ள மக்கள் உண்ண உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பொருளாதார பிரச்னைகள், உள்நாட்டுப் போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வெடிவிபத்தால் வீடு, உடமைகளை இழந்து நடு வீதியில் நிற்கின்றனர்.

இந்த கோர விபத்திற்கு அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் எனக் கூறி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் கோபத்துடன் சாலைகளில் இறங்கி போராடத் துவங்கி உள்ளனர்.

ஏராளமானோர், பார்லிமென்ட்டிற்கு முன்னால் கூடி சாலைகளில் தீ வைத்தும் கற்களை வீசியும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் சாலைகளில் திரண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக 16 பேரிடம் அரசு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு அரசு அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

வெடிவிபத்தினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு முன்பே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் லெபனான் அரசுக்கு சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே