கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இரங்கல்

கேரள நிலச்சரிவில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இதனால், மூணாறு பகுதியில் சிறு பாலங்கள், சாலை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மூணாறு அடுத்த ராஜமாலா பகுதி அருகே உள்ள பெட்டிமடி, கன்னிமலை தேயிலை தோட்டப் பகுதிகளில் தொடர் மழையால் நள்ளிரவில் பலத்த நிலச் சரிவு ஏற்பட்டது.

இதில் கன்னிமலை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் 30 குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 82 பேர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானோர் திருநெல்வேலி, ராஜபாளையம், தென்காசி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

நிலச்சரிவு குறித்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், வனத் துறையினர், தீயணைப்பு மீட்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், மண்சரிவில் சிக்கியிருந்த 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், மண்ணில் புதையுண்டு உயிரிழந்த 17 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் கேரள நிலச்சரிவில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது சுட்டுரையில், கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் இன்று (07.08.2020) அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் கேரளா முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே