எல்லையில் ஆய்வு செய்வதற்காக லடாக் சென்றார் ராஜ்நாத் சிங்….

லடாக் எல்லையில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு அமைதி திரும்பிய நிலையில் அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் சென்றார்.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து இருதரப்பும் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் எல்லையில் குவித்ததால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் போர்ப் பதற்றம் நிலவியது.

பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றநிலவையில் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சூசல் பகுதியில் இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஃபிங்கர் மற்றும் டெப்சாங் பகுதிகளில் பதற்றத்தைத் தணிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருந்தது.

மேலும் மீதம் உள்ள படை வீரர்கள் மற்றும் போர்த் தளவாடங்களை விலக்கிக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தனிவிமானம் மூலம் லடாக்கில் உள்ள லே நகருக்கு சென்றார்.

அவருடன் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம். நரவாணே ஆகியோர் உடன் சென்றனர்.

லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்கிறார். ஸ்டக்னா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்தும் சாகச நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஒத்திகைகள் ஆகியவற்றையும் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.

கடந்த 3-ம் தேதி பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு திடீரென பயணம் மேற்கொண்டார். அங்கு வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.

ஆனால், ஜூலை 3-ம் தேதி திட்டப்படி ராஜ்நாத் சிங்தான் லடாக் செல்வதாக இருந்தது.

ஆனால், அந்த தேதியில் பிரதமர் மோடி சென்றதால், ராஜ்நாத் சிங் தனது பயணத்தை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே