குரூப் 4 முறைகேடு தொடர்பான விசாரணை – தற்போதைய நிலை!

குரூப் – 4 தேர்வு முறைகேடு வெடித்துள்ள நிலையில், தேர்வு தொடர்பான அடுத்த கட்ட பணிகளை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது.

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகியுள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னையில் தலைமை காவலராக பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டி என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, சென்னையில் இருந்து சிவகங்கை சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீசார் காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த உதவியாளர் வேல்முருகன் என்பவரை கைது செய்தனர்.

இவர், தலைமைக் காவலர் சித்தாண்டியின் தம்பி என்பதும், குரூப் -2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பெற்று காரைக்குடி இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2018 நவம்பர் மாதம் இளநிலை உதவியாளராக சேர்ந்ததும் தெரியவந்தது.

சித்தாண்டி குடும்பத்தில் உள்ள மேலும் 3 பேர் முறைகேடாக தேர்வில் வெற்றிபெற்றனரா என்பது உறுதியானால் அவர்களும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட வேல்முருகனை சிபிசிஐடி போலீசார், மதுரையை தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வாணையத்தில் பணியாற்றும் 3 ஊழியர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தேர்வு தொடர்பான அடுத்த கட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, காவலர் சித்தாண்டி குடும்பத்தோடு தலைமைறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தினந்தினம் புதுப்புது திருப்பங்களும், கைதுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதனால், தலைமைக் காலவலர் சித்தாண்டி பிடிபட்டால் மேலும் பலர் சிக்குவார்கள் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே