குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நாளை ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தேசியக் கொடி ஏற்றுகிறார்.
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நடத்தப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழாப் பகுதிக்கு காலை 7.55 மணிக்கு வருகிறார். அவரை தொடர்ந்து காலை 7.57 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகிறார்.
விழா மேடைக்கு அருகே நடப்பட்டுள்ள உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைப்பார்.
அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் தூவும்.
அதைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடத்தப்படும்.
பின்னர் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு அணியினரின் அணிவகுப்பு நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார்.