போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார்…!

TNPSC தேர்வு முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் என மொத்தமுள்ள 8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் நிலை காவலர் எழுத்துத்தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இத்தேர்வை 3,02,276 பேர் எழுதியிருந்தனர்.

தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பரில் வெளியான நிலையில், வேலூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 130-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களுக்கு நள்ளிரவில் விண்ணப்பப் பதிவு நடத்தப்பட்டதும், அவ்வாறு பதிவு செய்த மாணவர்களுக்கு ஒரே வரிசையில் பதிவு எண்கள் கிடைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியபோது, கண்காணிப்பாளர் உதவியோடு முறைகேடு நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முறைகேடு சர்ச்சையால் அதிர்ச்சியடைந்துள்ள தேர்வர்கள், முறையான விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டாம் நிலை காவலர் தேர்வில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், அதைப்பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாக கூறியுள்ள தேர்வாணையம், உடற்தகுதித் தேர்வு இனிதான் நடைபெறவுள்ளதாக கூறியுள்ளது.

அனைத்துத் தேர்வுகளும் முடிந்த பின்னரே முறைகேடு நடந்ததா என்பது பற்றி உறுதியாக கூற முடியும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே