ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 313 எம்பிபிஎஸ் இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் கல்விக் கட்டணத்தை scholarship எனும் உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில், ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து, அவர்களின் மருத்துவ கனவினை நனைவாக்கி, அதிமுக அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் தேதி அறிவித்தவாறு, மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று, அவர்களின் வாழ்வில் அரசு வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும்; திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே