இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதையொட்டி ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்திய விமானப்படையின் பலத்தை பெருக்கும் நோக்குடன் பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமான நிறுவனத்திடம் இருந்து இரட்டை எஞ்சின்கள் கொண்ட 36 போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

அதில் தயாரிக்கப்பட்ட முதல் 10 விமானங்களில் முதலாவது விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து மேலும் நான்கு விமானங்கள் பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் வசம் ஒப்படைக்கப்பட்டன.

பிறகு மேலும் ஐந்து விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதில் பிரான்ஸில் உள்ள ஐந்து விமானங்களில் இந்திய விமானப்படையணியைச் சேர்ந்த வீரர்கள், விமானத்தை இயக்கும் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

அதில் ஐந்து விமானங்கள் இந்தியாவின் அம்பாலாவில் உள்ள விமான படைத்தளத்துக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி வந்தன.

அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி, இந்திய பாதுகாப்புப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா, பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரான்ஸ் தரப்பில் அந்நாட்டுக்கான தூதர் எமானுவேல் லெனாயின், பிரான்ஸ் விமானப்படை துணைத் தளபதி ஏர் ஜெனரல் எரிக் ஆட்டுலெட், டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்திய விமானப்படை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ரஃபேல் போர் விமானங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது கருதப்படுகிறது.

இதையொட்டி ரஃபேல் மற்றும் தேஜாஸ் போர் விமானங்கள் பங்குபெறும் வான் சாகச காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் 5 ரஃபால் போர் விமானங்கள் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படையின் 17ஆவது படையணியான கோல்டன் ஏரோஸ் (Golden arrows) பணியில் சேர்க்கப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே