தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் – அமித் ஷா

தமிழகத்தில் நடந்து வரும் பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், உலகிலேயே மிகத் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்கு தமிழ் தெரியாது,

அதனால் தமிழில் உரையாற்ற முடியாதது வருத்தமளிக்கிறது. தமிழில் பேச முடியாததற்கு முதலில் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்று அமித் ஷா தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. 

கரோனாவிலிருந்து குணமடைவோரின் தேசிய விகிதத்தை விட தமிழகத்தில் குணமடைவோரின் விகிதம் அதிகம்.

தமிழக முதல்வர், துணை முதல்வரின் நிர்வாகத்தின் கீழ், தமிழகம் கரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.

கரோனாவை எதிர்த்து அரசுகள் மட்டும் போராடவில்லை. 130 கோடி இந்தியர்களும் போராடி வருகிறார்கள்.

உடல் நலக் குறியீட்டில் மாவட்டங்கள் இடையே தமிழகத்தின் வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன.

கரோனா தடுப்பு மட்டுமல்ல நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

அனைவருக்கும் 2022-ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி என்ற திட்டமும் நிறைவேறும் என நம்புகிறேன் என்று அமித் ஷா கூறினார்.

தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.4,400 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலனுக்காக மோடி அரசு மூன்று விதமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. மோடி அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு அளித்தது.

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை 2024-ஆம் ஆண்டுக்குள் உறுதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே