முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் : அன்புமணி

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

மருத்துவ பட்ட மேற்படிப்பில் 30 சதவீத இடங்களை அதிகரிக்கும் இந்திய மருத்துவக்குழுவின் முடிவுக்கு அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது மட்டும் போதாது எனவும், ஊரகப் பகுதிகளில் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்கு இது நிரந்தரமான தீர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை ரத்து செய்ததால், ஊரக பகுதிகளில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறியுள்ள அன்புமணி, முதுநிலை மருத்துவ படிப்பில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்குவது தான் சிறந்த தீர்வாகும் என தெரிவித்துள்ளார்.

இதை செயல்படுத்தாவில்லை என்றால் அடுத்த சில ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு கூட மருத்துவர்கள் முன்வர மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே