FLASH NEWS : மஹாராஷ்டிரா அரசியல் வழக்கின் விசாரணை நாளை காலைக்கு ஒத்திவைப்பு

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிரான வழக்கில், விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் நவம்பர் 23-ம் தேதி காலையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்று கொண்டனர்.

இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வழக்கு நீதிபதிகள் என்.வி. ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விடுமுறை தினமான நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிவசேனா, காங்கிரஸ் சார்பில் கபில் சிபல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி, பாஜக சார்பில் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகினர்.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

முதலில் வாதத்தை தொடங்கிய கபில் சிபல், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்து விட்டதாகத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாஜகவை இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கபில் சிபல் வலியுறுத்தினார்.

பெரும்பான்மை இருந்தால் சட்டப்பேரவையில் பாஜக நிரூபிக்கட்டும் என்றும், இல்லையெனில் நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடுதல் அவகாசம் அளிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

நேற்று பதவியேற்றவர்கள் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 41 எம்எல்ஏக்கள் அஜித் பவாரை சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி, அரசு அமைக்கவில்லை என குற்றம்சாட்டியவர்கள், இப்போது ஏன் புதிய அரசு பதவியேற்றுள்ளது என கேள்வி எழுப்புவதாக புகார் தெரிவித்தார்.

குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரின் நடவடிக்கைகளை எந்த நீதிமன்றமும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமையில் இந்த வழக்கை பட்டியலிட்டிருக்கவே கூடாது என வாதிட்ட ரோஹத்கி, கிடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளிலாவது நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றும் கிண்டலாகக் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்றிரவு தான் தன்னிடம் மனு கொடுக்கப்பட்டதாகவும், தனக்கு வேறு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரி தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அளித்த கடிதம், ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்த கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சீலிடப்பட்ட உறையில் ஆளுநர் அளித்த கடிதம், ஆதரவுக்கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் தேதியை ஆளுநர் முடிவு செய்வார் என்று தேவேந்திர பட்நாவிஸ் தரப்பு வாதிட்டது.

ஆனால் பெரும்பான்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்யும் இடம் சட்டப்பேரவை; ஆளுநர் மாளிகை இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதனை அடுத்து மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிரான வழக்கில், விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே