தனது பேச்சு சர்ச்சையானது குறித்து விளக்கமளித்து இருக்கும் குருமூர்த்தி, ஓபிஎஸ்-இடம் பேசியபோது அவரை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என்று மறுத்திருக்கிறார்.
திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் வார இதழின் பொன்விழாக் கூட்டத்தில் பேசிய துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தி, தான் சொன்னதின் பெயரிலே ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார் என்று கூறியிருந்தார்.
மேலும் சசிகலா முதல்வராக பணிகள் நடந்தபோது, என்னிடம் வந்த ஓ.பன்னீர் செல்வத்திடம், நீங்கள் எல்லாம் ஆம்பளையா…? எதுக்கு இருக்கீங்க…? என்று கேட்டேன்.
நான் கூறியதால் தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்தேன் என்று பேசியிருந்தார்.
ஓ.பன்னீர் செல்வம் பற்றி குருமூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குரு மூர்த்தி ஆணவத்தின் உச்சத்தில் பேசியிருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய பேச்சு பற்றி குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளர்.
அதில் ஓ.பி.எஸ் உடன் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும்.
அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார்.
அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை என்றார்.
எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல என்றார்.
எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது; தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை; கருத்து வேறுபாடுகள் தவிர்த்து என்று ட்வீட் செய்துள்ளார்.