தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக பல தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 500-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநில அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மே 7-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தைவிட குறைவான நோய்த் தொற்று உள்ள அண்டை மாநிலங்களின் எல்லையில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குவிகிறார்கள் என மக்கள் மீது பழிபோட்டு, ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது நியாயமானதல்ல!
மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகைகளை, உரிமையுடனும் துணிவுடனும் வலியுறுத்திப் பெற்று வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டிய அ.தி.மு.க அரசு, ஊரடங்கு காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது.