குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் மருத்துவர், நவம்பர் 27ஆம் தேதி பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, நவீன், சிவா, கேசவலு ஆகிய 4 நான்கு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே இன்று அதிகாலை, 4 கொலையாளிகளையும், போலீசார் விசாரணைக்காக சம்பவம் நடந்த ஷாத் நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது வெளிச்சம் இல்லா நேரத்தில், நான்கு பேரும் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து தற்காப்பு கருதி 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெண் மருத்துவரின் தந்தை, தனது மகள் கொல்லப்பட்டு 10 நாட்கள் ஆகியுள்ளதாகத் தெரிவித்தார்.
தனது மகளைக் கொன்ற 4 குற்றவாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம், தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.