பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் ராஜ் குமார் ராய் முன்னிலை வகித்துள்ளார்.

பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

அக்டோபர் 28-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், நவம்பர் 3, 7-ம் தேதிகளில் 2 மற்றும் 3-ம் கட்டத் தேர்தலும் நடந்தது. இன்று வாக்குகள் அனைத்தும் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் மகா கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடும் போட்டியளித்து, முன்னிலைக்கு வந்தது.

பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்கள் எந்தக் கூட்டணிக்கும் கிடைக்காமல் இரு கூட்டணியும் கடும் போட்டியில் செல்கின்றன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ராஜ்குமார் ராய் போட்டியிட்டார்.

தொடக்கத்தில் தேஜ் பிரதாப் முன்னிலை வகித்து வந்த நிலையில், அதன்பின் பின்னடைவைச் சந்தித்தார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தேஜ் பிரதாப் யாதவ் 4,102 வாக்குகள் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்குமார் ராய் 5,621 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இமாம்காஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி 3,815 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் உதய் நாராயண் சவுத்ரி 5,822 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே