உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் மறுவரையறைக்குப் பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையே தங்கள் கட்சி கூறி வந்ததாகத் தெரிவித்தார்.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்துவிட்டு பிற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக அதிமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், உண்மையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் ஆளும் அதிமுகவுக்கு இல்லை என்றார்.
ஆளும் கட்சிக்கு துணைபோகும் அமைப்பாக மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய மு.க. ஸ்டாலின், இனிமேலாவது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை செயல்படுத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.