9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்ட நிலையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் சூரிய காந்த், பூஷன் ராமகிருஷ்னன் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
9 மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த புதிய அறிவிக்கை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் வார்டுகளை வரையறை செய்து 4 மாதங்களில் தேர்தல் நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை அடுத்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்த பின்னர், புதிய அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிவிப்பாணையை வாபஸ் பெற்றுள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நடக்க வாய்ப்பு இல்லை.