மஹாராஷ்ட்ராவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் தொடரும் கனமழையால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இதனால் மும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யத் துவங்கியது.

கடந்த 24 மணிநேரத்தில் கொலாபா ஆய்வக பகுதியில் 29 செ.மீ., மற்றும் மும்பை சாந்தாகுரூசில் 20 செ.மீ., மழை கொட்டியது.

மழை தொடர்வதால் நகரின் செம்பூர், வடலா, தாராவி, அந்தேரி, ஹிந்த்மாதா, மாகிமின் கிங்ஸ் சர்க்கிள், ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

சுரங்க பாதைகளில் தேங்கியுள்ள நீரினை மாநகராட்சி ஊழியர்கள் பம்ப் மூலம் இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.

பலத்த கடற்காற்றின் காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் எழுகின்றன. இதனால் கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொலாபாவில் கடலோரப் பகுதி மீனவர் குடியிருப்புகளில் தண்ணீர் புகும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மும்பை அருகே உள்ள பொவாய் ஏரி நிரம்பி மிதி ஆற்றில் வழிந்தோடுகிறது.

இதனிடையே மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்தமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே