முதலமைச்சருக்கு விவசாயிகள் கொடுத்த புதிய பட்டம்..

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் விவசாய சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழா மேடைக்கு, முதல்வரை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற விவசாயிகள், காவிரி காப்பாளன் என்ற பட்டம் வழங்கி மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சொந்த காலிலே நிற்க கூடிய தொழில் விவசாயம் மட்டும் தான் என்றார்.

விவசாயிகளுக்கு வருமானத்தை இரட்டிப்பாக்கும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற அரசு பரிசீலித்து வருவதாகவும்; அது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும், விவசாயிகள் சார்பில் காவிரி காப்பாளன் என்ற பட்டத்தை அளித்துள்ளதால், எப்போதும் காவிரியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கண்னை இமை காப்பது போல் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து காக்கும் என குறிப்பிட்ட முதல்வர், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நெல் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

விழா முடிவில் விவசாய சங்கங்களின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏர் கலப்பை மற்றும் நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே