அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு – டி.டி.வி.தினகரன் கோரிக்கை..!!

அஞ்சல்துறைக்கான தேர்வு பட்டியலில் தமிழ் மொழி இல்லாதிருப்பது தமிழகத்தில் தேர்வு எழுதும் இளைஞர்களை பாதிக்கும், தமிழ் மொழியை உடனடியாக இணைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

அஞ்சல் துறையில் பல்வேறு பணிகளை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முதல் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது.

இரண்டாம் வினாத்தாள் மட்டுமே மாநில மொழிகளில் இருந்தது.

தபால் துறை தேர்வில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடந்து முடிந்த தபால்துறை தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. 

விரைவில் நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தபால் துறை தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த செப்டம்பரில் தேர்வு அறிவிக்கப்பட்டது, அப்போது இந்தி பேசாத மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட அட்டவணையில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கம் போல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் அஞ்சல் துறை தேர்வுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தமிழ் மொழி இல்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது மத்திய அரசின் முந்தைய அரசாணைக்கு மாறாக உள்ளதாக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

‘அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே இது தொடர்பாக மத்திய அரசு அளித்திருந்த வாக்குறுதியின்படி தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

எனவே, இதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திருத்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே