பாஜக கூட்டத்தில் மரணமடைந்த விவசாயி – ஆனாலும் தொடர்ந்து நடந்த கூட்டம்..!!

விவசாயி இறந்த பிறகும் பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து உரையாற்றியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள முண்டியில் நேற்று பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அப்போது ஜீவன் சிங் என்ற 70 வயதான விவசாயி ஒருவர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார்.

கூட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போது திடீரென அந்த விவசாயி மயக்கமடைந்து நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு ஜீவன் சிங் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் இறந்தார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் யாதவ், பாஜக எம்.பி. சிந்தியா மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை குற்றஞ்சாட்டினார்.

விவசாயி இறந்த பின்னரும் தலைவர்கள் தொடர்ந்து உரை நிகழ்த்தினர். பாஜகவின் மனநிலையும் மனிதநேயமும் இதுதானா” என்றார் அவர்.

பாஜக மூத்த தலைவர் கோவிந்த் மாலு கூறுகையில், விவசாயியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அது குறித்து அறிந்தவுடன் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதாகவும் கூறினார்.

மேலும் விவசாயி இறந்த கூட்டத்தில் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே