வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..!!

தேனி – போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டி அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி சாலை மறியலில் ஈடுபட்டார்.

கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஆதரவாளர்களைப் போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி வருகின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும் ஹத்ராஸ் சம்பவங்களை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேனி – போடி சாலையில் இன்று (திங்கள்கிழமை விவசாயிகள் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், தேனி – போடி சாலையில்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே, போராட்டத்துக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

நியாயமான போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் எதிர்ப்பை மீறி நடத்தவேண்டியிருக்கும் என கே.எஸ்.அழகிரியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தொடர்ந்து இன்று காலை அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று காலையில் தேனி – போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கொடியுள்ள வாகனங்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. டிராக்டர்களிலும் விவசாயிகள் வர முடியவில்லை. விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அறிவித்தபடி, இன்று காலை 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்திற்காகத் திரண்டனர்.

ஆனால், அவர்களுக்குப் போலீஸார் அனுமதி மறுத்தனர்.

தற்போது அவர் காங்கிரஸ் தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

அவரையும் காங்கிரஸ் தொண்டர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே