கோலமிடும் பெண்களின் குடும்பம் அலங்கோலமாகிவிடும் – பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

திமுகவினர் வேண்டுகோளை ஏற்று பெண்கள் கோலம் போட்டால், அவர்கள் குடும்பம் அலங்கோலமாக மாறிவிடும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் பாஜகவின் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நெல்லை கண்ணன் கைது நடவடிக்கை காலம் கடந்த செயல் என்ற போதிலும், தற்போது கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையை பாராட்டுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிறுபான்மையினரை தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்த முயற்சிக்கும் திமுகவினர், பெரும்பான்மையினரும் களத்தில் இறங்கி போராட்டம் நடத்த வருவார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பிரதமர் ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ள நிலையில், எதிர்கட்சிகள் வேண்டுமென்றே வன்முறையை தூண்டி வருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

பாகிஸ்தானை சேர்ந்த இயக்கத்தோடு தொடர்புடைய பெண் தான் கோலமிட்டு கைதாகியதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்திட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே