இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணனை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை கண்ணன் கைது நடவடிக்கையை கண்டித்து, சென்னை சேப்பாக்கம் செய்தியாளர்கள் சங்கத்தில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, திருமுருகன் காந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாஜக தூண்டுதலுக்கு அஞ்சி தமிழக அரசு நெல்லை கண்ணனை கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த 24மணி நேரத்திற்குள் நெல்லை கண்ணனை விடுதலை செய்யாவிட்டால் மெரினாவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய வேல்முருகன் ஹெச்.ராஜா பிற கட்சியினரை அவதூறாக பேசுவதை கண்டிக்கிறோம். அவர் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் போராடிய ஹெச்.ராஜா-வை கைது செய்யவில்லை என்றால் நாங்களும் மெரினாவில் கூடி போராடுவோம் என்றும் தெரிவித்தார்.