குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மீதான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவா மாநில காங்கிரஸை சேர்ந்த 4 தலைவர்கள் கட்சியில் இருந்து இன்று ராஜினாமா செய்தனர். அவர்களில் 3 பேர் பாஜகவில் இணைந்தனர்.
மத்திய அரசு கடந்த மாதம் குடியுரிமை திருத்தசட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில், அதனை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
இதனிடையே தேசிய குடிமக்கள் பதிவேட்டினை அமல்படுத்தக்கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.
இந்நிலையில் CAA மற்றும் NRC விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து கோவா மாநிலத்தை சேர்ந்த 4 தலைவர்கள் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
- பனாஜி தொகுதி கமிட்டி தலைவர் பிரசாத் அமோன்கர்,
- வட கோவா சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவீத் ஷேக்,
- தொகுதி கமிட்டி செயலாளர் தினேஷ் குபல் மற்றும்
- முன்னாள் இளைஞர் அணி தலைவர் ஷிவ்ராஜ் தர்கர் ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர்.
ராஜினாமா செய்த பிரசாத் அமோன்கர் செய்தியாளர்களை சந்தித்த போது, குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி பொதுமக்களை, குறிப்பாக சிறுபான்மையினரை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது.
CAA மற்றும் NRC விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் தவறான நிலைப்பாட்டினை நாங்கள் எதிர்க்கிறோம்.
எதையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கக்கூடாது, குடியுரிமை திருத்தசட்டம் வரவேற்கத்தக்க ஒன்று.
அரசியல் ஆதாயங்களுக்காக சிறுபான்மையினரின் மனங்களில் பயத்தை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த வாரம் இந்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களில் நாங்களும் கலந்துகொண்டோம்.
ஆனால் தலைவர்களின் பேச்சு வாயிலாக சிறுபான்மையினரின் எண்ணத்தில் பயத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டோம். இது சரியானதல்ல என்று அவர் தெரிவித்தார்.
கோவா தலைநகர் பனாஜியில் பாஜக பொறுப்பு தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.