ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகத்தில் இன்றுடன் ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் இரவு-பகல் பாராது மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றுடன் (மார்ச் 31) ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு ஒப்பந்த முறையில் பணி நீட்டிப்பு செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

ஓய்வுக்குப்பின், ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் அவர்கள் பணியைத் தொடர தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் அறிவித்துள்ளார்.

மேலும், உலகெங்கும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்; அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே