தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின.
8 கால யாகசாலை பூஜைகளுக்கு பின்னர் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் கோவிலில் உள்ள 338 சாமி சிலைகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
13 அடி உயர பெருவுடையாருக்கு இன்று அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.
இதனை அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி, அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அசோக்டோங்ரே தொடங்கி வைத்து விழா ஏற்பாடுகளை பார்வையிட்டனர். இதனிடையே கோவிலில் யாகசாலை பூஜைகள் முறைப்படி தொடங்கின.
இதற்காக பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் 22 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த யாகசாலை பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு என 3 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.
யாகசாலையில் 110 யாக குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூஜையில் 300 சிவாச்சாரியார்களும், 60 ஓதுவார்களும் பங்கேற்றுள்ளனர்.
காவிரி, கங்கை, யமுனா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஆறுகளில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்ட கடங்கள் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டுள்ளன.
யாகத்திற்காக வசம்பு, கருங்காலி, கருடன்கிழங்கு, மிளகு தக்காளி, இலுப்பைபூ, வலம்புரி, மருதாணி விதை, சாரணை வேர், தாமரைகிழங்கு, மாவிளங்கம்பட்டை, அசோகப்பட்டை, பூதாளப்பட்டை, நிலவேம்பு, ஆடாதொடா இலை, ஆடுதின்னாபாலை, வேப்பம்பூ, ஆவாரம்பூ, நீலிஅவுரி இலை, ஊமத்தை விதை, கடுக்காய், புரசன்விதை உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சுமார் 2 ஆயிரத்து 600 கிலோ மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, கொய்யாப்பழம் உள்ளிட்ட பழவகைகளுடன், நவதானியங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று தொடங்கி 5-ஆம் தேதி காலை வரை 8 காலங்களாக நடைபெறும் ஒவ்வொரு பூஜையின்போதும் 110 குண்டங்களில் மூலிகை பொருட்கள், நவதானியங்கள், பழங்களை போட்டு சிவாச்சாரியார்களும், ஓதுவார்களும் பூஜை செய்கின்றனர்.
நாளை முதல் 4ஆம் தேதி வரை காலையும், மாலையுமென பூஜைகள் நடைபெறுகின்றன. 5-ந் தேதி காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
அதனைத்தொடர்ந்து காலை 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
காலை 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கும் நடக்கிறது.
தொடர்ந்து 5 நாட்கள் ஹோமத்தீ வளர்த்து பூஜை நடைபெறுவதால் யாகசாலை பந்தலில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.