தமிழக பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவை நாளை கூட உள்ளது.
2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.
முக்கியத் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதி, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நாளை நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்தும், விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.