BREAKING NEWS : உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில், அனைத்து மாவட்டங்களிலும் வார்டுகள் முறையாக மறுவரையறை செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் போது வார்டு வரையறை பணிகள் நிறைவு பெறாமல் எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனால் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தலை ஒத்திவைக்க மாநில தேர்தல் ஆணையம் தயார் என கூறியது.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கினர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

மேலும், 4 மாதத்திற்குள் சட்டப்பூர்வ பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே