சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடக் கோரி மீனவர் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7ம் தேதி வரை தடை விதித்துள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
கர்நாடக உயர் நீதிமன்றம் தடையை நீக்கக் கூடும் என்பதால், வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வரைவு அறிக்கையின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றம் தடையை நீக்கினால், நீதிமன்றத்தை அணுகலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 13ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.