FLASH NEWS : 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கும் வரை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் தொடர்ப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிற்பகலுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளையும் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வரையறையை முழுமையாக முடித்திட வேண்டும் எனவும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடிவடையும் வரை, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரியும் திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்துவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் பிரிவு 9-ன் படி செல்லாது என்பதையும் திமுகவின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த புதிய மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளளப்பட்டது.

நிலுவையில் இருந்த வார்டு மறுவரையறைப் பணிகள் முடிவடைந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இதனால் திமுக மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பிரமாணப் பத்திரத்தில் கோரப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் வார்டு வரையறை அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், சட்டத்தை மதித்து தமிழக அரசு செயல்பட வேண்டும். தேர்தல் நடந்து நேர்மையான நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறினார்.

வழக்கு விசாரணையின் போது, வார்டு வரையறை பணிகள் முடிவடையாமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது ஏன்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் சரமாரி கேள்விகள் எழுப்பினர்.

இதனை அடுத்து, பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பழைய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால், தமிழக அரசின் இந்த வாதத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்தாமல், பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது சரியல்ல என்று கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்கலாமா? என்று கேட்டு பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இல்லை என்றால் தேர்தல் அறிவிப்பானையை ரத்து செய்ய நேரிடும் என்று நீதிபதிகள் கூறினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே