வதந்திகளை பரப்பி ஐஐடி நிர்வாகத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் : ஐஐடி நிர்வாகம்

மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பி ஐஐடி நிர்வாகத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என சென்னை ஐஐடி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாத்திமா லத்தீப்பின் மரணம் ஐஐடி மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறந்த மாணவியான பாத்திமா லத்தீப் அகால மரணம் அடைந்தது துரதிஷ்டவசமானது என்றும், மாணவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நன்றாக இருக்க ஐஐடி நிர்வாகம் தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்தது பற்றி தகவல் கிடைத்த உடனேயே அது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப் படுவதாகவும் சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணை முடிவடையும் முன்பே சென்னை ஐஐடியில் பேராசிரியர்களை தொடர்புபடுத்தி பரப்பப்படும் வதந்திகள், ஐஐடி ஊழியர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் சென்னை ஐஐடி நிர்வாகம் வேதனை தெரிவித்துள்ளது.

ஐஐடி பேராசிரியர்கள் திறமைக்கு பெயர் பெற்றவர்கள் என குறிப்பிட்டுள்ள ஐஐடி நிர்வாகம்;

மாணவி பாத்திமா லத்தீப் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளால் ஐஐடியின் நன்மதிப்பு பாதிக்கப்படுவதாகவும், எனவே அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே