வேலூர் தேர்தலில் பண பலத்தால் வெற்றி பெற்றது போல் விக்ரவாண்டி இடைத்தேர்தலிலும் பணபலத்தால் வெற்றிபெற திமுக முயல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசிய எடப்பாடிபழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மரியாதை நிமித்தமாக தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து பேசியதாகவும், தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, எனினும் மக்கள் செல்வாக்குடன் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.