மத்திய அரசை தட்டிக் கேட்கும் அரசாக திமுக ஆட்சி இருக்கும் – மு.க ஸ்டாலின் பேச்சு..!!

தமிழரின் வாழ்வுரிமை, தமிழகத்தின் எதிர்காலத்தை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீட்டெடுப்போம் என பரமக்குடி பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வரவேற்றார்.

சரியாக பகல் 3.55-க்கு வந்த ஸ்டாலின் கூட்டத்திற்குள் சென்று கட்சித்தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து கை கொடுத்தார்.

பின்னர் ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து புகார் பெட்டியில் போடப்பட்ட மனுக்களில் சிலவற்றை தேர்வு செய்து, அவர்களைப் பேசவைத்து குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஸ்டாலின் பேசும்போது, மற்ற மாவட்டங்களைவிட ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்கூட வரும் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என நினைத்தேன். ஆனால் மக்களின் ஆர்வத்தை பார்க்கும்போது, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன்.

ஆணவத்தால் இதைப் பேசவில்லை, மக்களின் உணர்வுகளைத்தான் சொல்கிறேன். ஆட்சிக்கு வந்ததும், மக்களின் 100 கோரிக்கைகளில் 95-வது நிறைவேற்றுவேன்.

புயல், வெள்ளங்களால் மக்கள் பாதிக்கப்பட்டும், மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதை தட்டிக்கேட்க அதிமுக அரசுக்கும் தைரியம் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் திமுக தட்டிக்கேட்கும், உரிமையைப் பேசிப் பெறுவோம்.

ஆசிரியர் பணியிடங்களை லஞ்சம் இல்லாமல் நிரப்புவோம். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை அரசிடம் தலா ரூ. 5 கோடி பெற்றுத்தர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால், சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணித்தோம்.

முதல்வர் பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.3,000 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இவ்வூழல் குறித்து சிபிஐ-யின் விசாரணையை எதிர்கொள்ளாமல், முதல்வர் உச்சநீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுள்ளார். ஊழலில் முதலிடத்தில் இருப்பவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தான்.

தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. ஆனால் அவரை அடக்கம் செய்ய 6 அடி இடம் ஒதுக்க மறுத்தது தான் இந்த அதிமுக அரசு ஆனால் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு ரூ.80 கோடியில் நினைவிடம் கட்டியுள்ளனர்.

தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். சொந்தக்கட்சிக்காரர்களால் முதல்வர் பழனிச்சாமி ஓரங்கட்டப்பட்டு வருகிறார். அதிமுக அரசு சிறுபான்மையினரின் உரிமையை பறித்தது.

ஈழத்தமிழர் வாழ்வாதாரத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தமிழரின் வாழ்வுரிமையை, தமிழகத்தின் எதிர்காலத்தை வரும் தேர்தலில் மீட்டெடுப்போம் என பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, திமுக பிரமுகர் எஸ்.பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே