நெல்லையில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன் (34). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
வள்ளியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த முத்துராமன் நேற்று இரவு 9.30 மணியளவில் தனது உறவினர் ஒருவரை தெற்கு வள்ளியூரில் இறக்கிவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார்.
தெற்கு வள்ளியூர் ரேஷன் கடை அருகே வந்தபோது சாலையில் மண்ணெண்ணை பேரல்கள் கிடப்பதை கண்ட முத்துராமன் காரை விட்டு கீழே இறங்கி அதனை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
அப்போது அருகில் உள்ள கலையரங்கத்தில் மது அருந்திக் கொண்டிருந்த மர்ம நபர்கள், திடிரென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு முத்துராமனை சரமாரியாக வெட்டினர்.
இதில் முத்துராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துராமனின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே முத்துராமன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பணகுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.