மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள் – மு.க.ஸ்டாலின்

மாணவர்களே கெஞ்சிக் கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா, மோதிலால் ஆகியோர் ஒரேநாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதேநேரத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோவில்,

“நீட் தேர்வு மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பணிவான வேண்டுகோள்.. நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறை செய்தியை கேட்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்

பெற்றோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம்தான். ஆனால், அதே பிள்ளைகளுக்கு மன உறுதியையும், தோல்வியை தாங்கக்கூடிய சக்தியையும் சொல்லிக்கொடுங்கள்.

நீட் தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியம், தன்னம்பிக்கையை கொடுங்கள்” என்று பேசியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே