பெங்களூருவில் சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம்..!! (வீடியோ)

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று நடந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் மூன்று மாடி கட்டடம் ஒன்று இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கட்டடம் ஆட்டம் கண்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் அக்கட்டிடத்தில் குடும்பத்தினர் யாரும் தங்கியிருக்கவில்லை. எனினும் குடியிருப்பு பகுதியில் கட்டிடம் இருந்ததால் மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

அக்கட்டிடத்தில் மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளிகள் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அதில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் துரிதமாக தீயணைப்பு படையினரால் வெளியேற்றப்பட்டதால் உயிர் தப்பி உள்ளனர்.

மக்கள் இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் அனைவரையும் தக்க சமயத்தில் வெளியேற்றி உயிர் காத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் தொடங்கியுள்ளது.

தற்போது கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே