திருப்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்-தேவி தம்பதி திருப்பூர் அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் கடையில் ஜெகன் பணியாற்றிவரும் நிலையில், 3 மாதம் கர்ப்பமான தனது மனைவி தேவியை அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளார் ஜெகன்.
அப்போது தேவிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு மற்றும் பஞ்சு போன்றவை இருப்பது கண்டு ஜெகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குளுக்கோஸ் ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தகவலறிந்து ஆரம்ப சுகாதார மையத்துக்கு வந்து சோதனை செய்த மாநகர நல அலுவலர், மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியப் பிறகு துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
குளுக்கோஸ் பாட்டிலில் புழு இருந்ததாக எழுந்த புகாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.