சபரிமலையில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்..!

மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. தரிசனம் செய்ய வந்த நடுத்தர வயது பெண்கள் 10 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

தீப ஆராதனைகளுடன் தலைமை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கோயில் நடையை திறந்தார்.

இதைத்தொடர்ந்து மேல்சாந்தியாக ஏ.கே.சுதீர் நம்பூதிரி பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18 படிகள் ஏறி ஐயப்பனை வழிபட்டனர்.

ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து கோயிலுக்குச் செல்ல முயன்ற பெண்களால் பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காது என சுரேந்திரன் தெரிவித்திருந்த நிலையில் கோயிலைச் சுற்றிலும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெண் பக்தர்கள் அனைவரும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நடுத்தர வயதுப் பெண்களிடம் சபரிமலையின் நம்பிக்கை குறித்து காவல்துறையினர் விளக்கி கூறியதாக தெரிகிறது.

அதனை ஏற்றுக்கொண்ட 10 பெண்களும் ஐயப்பனை தரிசிப்பதை கை விட்டு திரும்பிச் சென்றனர்.

மண்டல பூஜைக்காக டிசம்பர் 27-ஆம் தேதி வரை கோயில் திறந்திருக்கும். பின்னர் மூன்று நாட்களுக்கு மூடப்படும் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 30-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

பின்னர் ஜனவரி 20ஆம் தேதி கோயில் நடை சாத்தப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே