வைகுண்ட ஏகாதசி.. சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்..!!

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் மனம் உருக நம்பெருமாளை சேவித்தனர்.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை 12.30 மணிக்கு மார்கழி மாத திருப்பாவை சேவையும், சுவாமி துயில் எழுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, அதிகாலை 4.30 மணியளவில் ஏழுமலையான் திருக்கோயிலில் உள்ள சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது.

பின்னர், ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற உள்ளூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சொர்க்கவாசலை கடந்து ஏழுமலையானை மனம் உருக தரிசனம் செய்தனர்.

மேலும், வைகுண்ட ஏகாதசியொட்டி, திருமலை மாடவீதியில் இன்று காலை 9 மணி அளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தங்க ரதத்தில் எழுந்தருளி வலம் வந்தார்.

அப்போது, “ரெங்கா, ரெங்கா” என்றும் “கோவிந்தா, கோவிந்தா” என்றும் சரணகோஷம் எழுப்பி நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருமலை திருப்பதியில், வழக்கமாக வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு அதாவது வரும் 3-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல, தமிழகத்தில் உள்ள பெருமாள் திருக்கோவில்களில், இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில், திருச்சி திருவரங்கம் அரங்நாதர் திருக்கோவில், கரூர் தாந்தோனிமலை திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே