மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வோரு விளையாட்டு வீரர்களின் உச்சபட்ச கனவு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தான்.

இதில் பதக்கம் வெல்லும் வீரர்கள் அவர்களின் நாட்டில் ஹீரோவாக கொண்டாடப்படுவார்கள்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது திட்டமிட்டப்படி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

உலகையே மிரட்டி வரும் கொரோனாவின் தாக்கம் ஒலிம்பிக்கையும் ரத்து செய்ய வைத்து விடும் என்ற பேச்சுகள் எழ தொடங்கியுள்ளன. 

ஆம், கொரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில், ஜூன் மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மூத்த உறுப்பினர் டிக் பவுன்ட் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளுக்கு ஜப்பான் 9 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதால் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் மற்றும் 2-ம் உலகப்போர் காலகட்டங்களை தவிர இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக வரலாறு இல்லை.

ஆனால் முதல் முறையாக சுகாதார அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் ரத்து செய்யப்பட கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.

அதேநேரம் ஒலிம்பிக் நடைபெற்றாலும் சீனாவை சேர்ந்த வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கை குறிவைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அவர்களின் கனவு நிறைவேற தடையாக உள்ள கொரோனா வைரஸ் இன்னும் 2 மாதங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே