நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு..; சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. அதில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் வாதிகளின் காலைப் பிடித்து அந்த வாய்ப்பை பெற்றார்கள் என்று பேசியிருந்தார்.

குருமூர்த்தியின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பல தரப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி, நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என்று கூறுவதற்கு பதிலாக நீதிபதிகள் என கூறிவிட்டேன் என்றும்; நீதித்துறை மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், நீதிபதிகள் நியமனம் குறித்து விமர்சித்த குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் முறையீடு செய்திருக்கிறார்.

இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்க தயாரிக்க இருப்பதாக நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே