திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சீன வாலிபருக்கு கொரோனாவா?

திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சீன இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர்கள் அவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவல மலையில் உள்ள ஒரு குகையில் சீனாவை சேர்ந்த இளைஞர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் வனத்துறையினர் உதவியுடன் குகைக்குள் இருந்த சீன இளைஞரை கைது செய்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதித்தனர்.

அதில், அவருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊரடங்கு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மலை குகையில் சீன இளைஞர் பதுங்கியிருந்த தகவல் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் நிலவியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே