பாடல் பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் காவல் அதிகாரி

பெங்களூருவில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரி ஒருவர் பாடல் பாடி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது.

இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதனால் உலக நாடுகள் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவில் இது வரை 606 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனாவின் தீவிரம் கருதி மத்திய அரசு அடுத்த 20 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

இதனால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வந்து தங்களுக்கான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதில் பிரச்னை என்னவென்றால் ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் சிலர் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் சில இடங்களில் காவல்துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியும் மக்களை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெண் காவல் அதிகாரி ஒருவர் பாடல் பாடி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பெங்களூருவில் பணிபுரியும் உதவி காவல் ஆணையர் தபாரக் பாத்திமா என்ப‌வர், புலிகேசி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்‌களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது, பாடல் ஒன்றை பாடி, கொரோனாவில் இருந்து பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தினார்.

காவல் அதிகாரி பாடல் பாடிய போது அங்கிருந்தவர்களும் அவருடன் சேர்ந்து பாடினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *