கொரோனா வைரஸ் தொற்றால் ஜம்மு காஷ்மீரில் முதல் பலி…

ஸ்ரீநகர் அருகே ஹைதர்போரா பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

அதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதல் முக்கியக் கட்டமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது.

அங்கு நேற்று மட்டும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்த 3,061 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் 80 மருத்துவமனைகளிலும்ஸ 1,477 வீடுகளிலும் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஜம்மு காஷ்மீர் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இந்த சூழலில் அங்கு முதல் உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீநகர் நகர மேயர் ஜுனைத் ஆசிம் மாத்தூ பதிவிட்ட தகவலில், கொரோனா வைரஸுக்கு முதல் பலி ஜம்மு காஷ்மீரில் நேர்ந்துள்ளது வருத்தமான செய்தியாக இருக்கிறது.

அந்த நபரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அவருக்கு ஆறுதலாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சாலும், அங்கு கொரோனா வைரஸால் முதல் உயிரிழப்பு நடந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

அவர் கூறுகையில், ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

இவரோடு பழகிய 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே