நீதிமன்ற வளாகத்தில் போலீசார் – வழக்கறிஞர்கள் மோதல்

டெல்லி தீஸ் ஹசாரே மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று போலீசார் மற்றும் சில வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி தீஸ் ஹசாரே மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

வழக்கறிஞர்கள், போலீசார், பொதுமக்கள் என்று தினமும் ஆயிரக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இன்று போலீசாருக்கும் வழக்கறிஞர்கள் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று போலீசார் கூறியதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மர்ம நபர்கள் சிலர் போலீஸ் வாகனம் ஒன்றுக்கு தீவைத்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவவே, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் வழக்கறிஞர் ஒருவர் படுகாயமடைந்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே