தாய்லாந்து மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

தாய்லாந்தில் நடைபெறும் 16 ஆவது ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்பது குறித்து பார்க்கலாம்.

தாய்லாந்தில் நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி ஆசியான் மாநாடு மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடும் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்றாம் நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார்.

தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

அப்போது தாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிடுகிறார். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை பிடித்த திருக்குறள் தற்போது தாய்லாந்து மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பாங்காக்கில் உள்ள சுழாலான்கோ பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் இருந்து தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்தார்.

இவர் ஏற்கனவே டாக்டர் அப்துல்கலாமின் அக்னிசிறகுகள் புத்தகத்தையும் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

கடந்த ஓராண்டாக முயற்சித்து மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை தாய்லாந்து தமிழ்ச்சங்கம் வெளியிடுகிறது.

இதனை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டுமென தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தாய்லாந்து நாட்டு தமிழ் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து புத்தகத்தை வெளியிட பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய தூதரகம் தமிழ் சங்காத்திடம் தெரிவித்தது.

புத்தக வெளியீட்டு விழாவில் தாய்லாந்து தமிழர்கள் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவை தொடர்ந்து மூன்றாம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதற்கிடையில் ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவை பிரதமர் மோடி சந்தித்து உரையாட உள்ளார்.

குருநானக்கின் 550-ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றையும் மோடி வெளியிட உள்ளார்.

பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியா இணைவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இச்சந்திப்புகளில் பிரதமர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே