ஜெயலலிதாவின் கடைசி நிகழ்ச்சி குறித்துப் பேச்சு: கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஜெயலலிதாவின் கடைசி நிகழ்ச்சி குறித்துப் பேசிக் கொண்டிருந்த அமைச்சரும், ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திரபாலாஜி, ஒருகட்டத்தில் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார்.

2011, 2016-ம் ஆண்டு தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கே.டி.ராஜேந்திரபாலாஜி. பால்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், சிவகாசி தொகுதியில் அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியது. இதனால் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் நேற்று இரவு பேசும்போது, ”10 ஆண்டுகளாக ஜெயலலிதா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். 5 ஆண்டுகள் அவரின் அமைச்சரவையில் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது ஜெயலலிதா அனைவரையும் வணங்கி விட்டுத்தான் செல்வார். ஆனால், அன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, யாரின் செயலோ தெரியவில்லை. எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டுச் சென்றார். ஜெயலலிதாவின் வார்த்தைகள் வெல்ல வேண்டும்.

பல்வேறு வருடங்களுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் எனக்குச் சிறிதாக அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது ஜெயலலிதா, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரையும் அழைத்து, ‘ராஜேந்திரபாலாஜிக்குத் திருமணமாகவில்லை. அதனால் அவருடன் இருங்கள்’ என்று அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் 5 மணி நேரம் என்னுடன் இருந்தனர்.

இதை ஏன் இப்போது சொல்கிறேன் தெரியுமா? ஜெயலலிதா இல்லை என்று யாரும் நினைத்துவிடாதீர்கள். அவர் எல்லோரின் இதயத்திலும் இருக்கிறார்” என்று ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். அப்போது துக்கம் தாங்காமல் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே