காங்கிரஸுக்கு வாக்கு இல்லை எனும் ஞானம் ஏன் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் வரவில்லை என்று துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய மற்றும் மாவட்டத் தலைவர் பதவி இடங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன்னால் அறிக்கை வாயிலாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது திமுக கூட்டணியில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ் எங்கள் கூட்டணியிலிருந்து விலகிப் போனால் எந்தக் கவலையும் இல்லை. அதனால், எங்களுக்கு நஷ்டமில்லை. அவர்களுக்கு ஓட்டே கிடையாது. அதனால், எங்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று தெரிவித்தார்.
இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம், துரை முருகன் அவர்களின் காங்கிரஸ் பற்றிய பேச்சு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பொறுப்பில்லாத பேச்சுக்கு பொறுப்புள்ள நபர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டியது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கார்த்தி சிதம்பரம் ட்விட்டர் பதிவில், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் தோன்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.