கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது.
பத்து நாட்கள் முடிவடைவதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 5 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும் அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு ட்விட்டர் தளத்தில் ஆதரவும், கிண்டலும் ஒருசேரக் கிடைத்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். ஏப்ரல் ஐந்தாம் தேதி விளக்குகளை ஏற்றுகிறோம். பதிலுக்கு தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். தொற்றுநோய் நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 5ம் தேதி விளக்குகள் ஏற்ற சொல்லி பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்த தனது அதிருப்தியை தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் ‘பிரதமர் உரை பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா எதிர்ப்பில் ஒற்றுமையை காட்டுவதற்காக ஒருமுறை ‘ கைதட்ட’ சொன்னதே போதுமானது. அதுவே வேடிக்கை விளையாட்டாக அமைந்தது.
மீண்டும் இது கேலிக்கூத்தாக உள்ளது. கொரோனாவின் பெயரால் குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி ‘குரங்காட்டம்’ நடத்துகிறார் ‘ என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு எதிராக, குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமரின் இந்தப் பேச்சுக்கு நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நான் பிரதமரின் கொள்கைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் எதிரானவள். ஆனால் அவர் இருக்கும் பதவிக்கு எப்போதும் மரியாதை தருவேன்.
நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ அவர் நமது பிரதமர். அதற்கு மதிப்பளிக்க வேண்டும். அவரை வசை பாடுவது உதவாது.
ஆனால் நரேந்திர மோடி அவர்களே நீங்கள் வேறொரு நல்ல யோசனையைத் தரலாம். கரோனாவை வீழ்த்த ஒரு கண்டுபிடிப்பு, ஏதாவது.
இதைச் செய்வதனால் (மின் விளக்குகளை அணைப்பது) நாம் கோவிட்டை வீழ்த்திவிடுவோமா?
யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து எதையும் ஏற்ற வேண்டாம். வீட்டிலேயே இருங்கள். சமூக விலகல்தான் இப்போது அதி முக்கியம். தயவுசெய்து கேளுங்கள்.
இந்தியப் பிரதமரிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு திட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, தினக்கூலிப் பணியாளர்களை, சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க யோசனை.
இது அறுவடை நேரம் என்பதால் விவசாயிகளுக்கு நிவாரணம்.
அவர்களின் அறுவடையைக் கொள்முதல் செய்து அதை மக்களுக்குச் சென்று சேர்க்க உதவ வேண்டும். எதையும் செய்யாதபோது அது ஆழமாகப் பாதிக்கிறது”.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.